பா.ஜ.,வுக்கு ஆதரவான செயல்பாடு ஆயுதப்படைக்கு இன்ஸ்., மாற்றம்
பா.ஜ.,வுக்கு ஆதரவான செயல்பாடு ஆயுதப்படைக்கு இன்ஸ்., மாற்றம்
ADDED : ஏப் 20, 2024 02:29 AM
திருச்சி:பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்ட உதவியதாக, மண்ணச்சநல்லுார் இன்ஸ்பெக்டர் தேர்தல் பணியில் இருந்து விடுவித்து, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ரகுராமன். பெரம்பலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மண்ணச்சநல்லுார் சட்டசபை தொகுதியில் உள்ள தீராம்பாளையத்தில், நேற்று தேர்தல் பணிக்காக சென்று, அங்குள்ள ஓட்டுச்சாவடி மையத்தை பார்வையிட்டுள்ளார்.
அப்போது, அங்கு ஓட்டு சேகரித்துக் கொண்டிருந்த கட்சியினரை இன்ஸ்பெக்டர் அப்புறப்படுத்தி உள்ளார்.
அப்போது, இன்ஸ்பெக்டருடன் வந்த ஓ.பி.எஸ்., அணியைச் சேர்ந்த கண்ணன், 57, என்பவர், பா.ஜ.,வுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் ஓட்டு கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.,வினர், இது குறித்து பெரம்பலுார் தி.மு.க., வேட்பாளர் அருண் நேருவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்க, இன்ஸ்பெக்டர் ரகுராமன் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

