பணம் கொடுத்து ஓட்டுக்கள் பெறுவதை விட அரசியலை விடுத்து விவசாயம் செய்வோம் தென்காசியில் சீமான் பிரசாரம்
பணம் கொடுத்து ஓட்டுக்கள் பெறுவதை விட அரசியலை விடுத்து விவசாயம் செய்வோம் தென்காசியில் சீமான் பிரசாரம்
ADDED : மார் 30, 2024 12:45 AM
தென்காசி:''பணம் கொடுத்து ஓட்டுக்கள் பெறுவதை விட அரசியலை விட்டு விலகி விவசாய செய்வோம்,'' என, தென்காசி தொகுதி வேட்பாளர் இசைமதிவாணனை ஆதரித்து புளியங்குடி, கடையநல்லுார் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அவர் பேசியதாவது: மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் என்பது நாள் ஒன்றுக்கு 30 ரூபாய் தான். தமிழ்நாட்டுப் பெண்கள் மாதம் 3 ஆயிரம் ரூபாய்க்கு குடிநீரை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
நல்ல குடிநீரை வழங்கிவிட்டு நீங்கள் தரும் ஆயிரம் ரூபாய் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் நாம் தமிழர் அரசியல் கட்சியின் கோட்பாடு.
கல்லுாரியில் சீட்டு வாங்க 3, 4 லட்சம் செலவு செய்யும்போது இலவச பஸ்பயணம் என அறிவித்துள்ளது தி.மு.க., அரசு. எங்களுக்கு இலவச பேருந்து தேவையில்லை தரமான இலவச கல்வியை தாருங்கள்.
இந்த பகுதியில் போட்டியிடும் இசைமதிவாணன் கடந்த 13 ஆண்டுகளாக எங்கள் கட்சியில் மக்கள் பணியாற்றி வருகிறார்.
ஜாதி, மதம் பார்த்தால் எங்களுக்கு ஓட்டளிக்க வேண்டாம். அப்படி ஓட்டுகள் எங்களுக்கு தேவையில்லை. உழைப்பை நம்பியே தேர்தலில் நிற்கிறோம்.
பணபலம் இல்லை, பணம் கொடுத்து ஓட்டு பெறும் அரசியல் எங்களுக்கு தேவையில்லை. அதைவிட வேளாண்மை செய்ய கிளம்பி விடுவோம் என பேசினார்.

