என் கணவருடன் தகாத உறவில் இருந்தார் பாலியல் புகார் பெண் போலீஸ் பற்றி ஐ.பி.எஸ்., அதிகாரி மனைவி பகீர்
என் கணவருடன் தகாத உறவில் இருந்தார் பாலியல் புகார் பெண் போலீஸ் பற்றி ஐ.பி.எஸ்., அதிகாரி மனைவி பகீர்
ADDED : பிப் 15, 2025 12:57 AM

சென்னை:'என் கணவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது பொய். அவருடன் ஓராண்டாக தகாத உறவில் இருந்த பெண் காவலர், 25 லட்சம் ரூபாய் கேட்டார்.
அதை கொடுக்காததால் பொய் புகார் அளித்துள்ளார்' என, 'சஸ்பெண்ட்' ஆன ஐ.பி.எஸ்., அதிகாரி மகேஷ்குமார் மனைவி டி.ஜி.பி., சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்துள்ளார்.
தமிழக காவல் துறையில் டி.எஸ்.பி.,யாக பணியில் சேர்ந்தவர் மகேஷ்குமார். நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்த போது, எஸ்.ஐ.,யாக பணியாற்றிய அனுராதா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின், அனுராதா விருப்ப ஓய்வு பெற்று விட்டார்.
தற்போது, டி.ஐ.ஜி., ரேங்கில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக, சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனராக பணிபுரிந்து வந்த மகேஷ்குமார் மீது, பாலியல் தொல்லை அளித்ததாக, பெண் போலீஸ் ஒருவர், டி.ஜி.பி.,யிடம் நேரடியாக புகார் கொடுத்தார்; மற்றொரு பெண் போலீஸ், இ - மெயில் வாயிலாக புகார் அளித்தார்.
இதுகுறித்து, டி.ஜி.பி., சீமா அகர்வால் தலைமையிலான விசாகா கமிட்டி விசாரித்து, டி.ஜி.பி.,க்கு அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், மகேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தன் கணவர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக, மகேஷ்குமார் மனைவி அனுராதா நேற்று டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.
பின், அவர் கூறியதாவது:
என் கணவர், தெரியாத நபர்களுக்குக்கூட உதவும் மனம் படைத்தவர். இருவரும் ஆசை ஆசையாக காக்கிச்சட்டை அணிந்து கொண்டோம். அதனால் தான், எங்களுக்குள் காதல் மலர்ந்தது. என் கணவர், முகாம் அலுவலகத்தில் பணியமர்த்தி, பாலியல் தொல்லை கொடுத்தார் என, பெண் போலீஸ் ஒருவர் புகார் அளித்துள்ளதில் உண்மை இல்லை; பொய் புகார் அளித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண் போலீஸ், என் கணவருடன் ஓராண்டாக தகாத உறவில் இருந்துள்ளார். இருவரும் நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
இருவரும் சம்மதத்துடன் பழகி வந்தனர். இது, எனக்கு நான்கு மாதம் முன்னர் தான் தெரியவந்தது. என் கணவரை கண்டித்தேன். அந்த பெண் போலீசை தொடர்புகொண்டு, 'நம் இருவருக்கும் குடும்பம் இருக்கிறது; இதோடு பழகுவதை நிறுத்திக்கொள்' என்று கெஞ்சினேன். அப்படி இருந்தும், பிப்., 7ல் கூட, தி.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளனர்.
பெண் போலீசுக்கு என் கணவர், ஐ.பி.எல்., கிரிக்கெட் டிக்கெட் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளார்; அவ்வப்போது பணமும், நகையும் வாங்கி தந்துள்ளார்.
சென்னை அருகே மறைமலை நகரில் அந்த பெண் போலீஸ் வீடு கட்டுகிறார்; அதற்கு உள் அலங்கார வேலைகளுக்கு, 25 லட்சம் ரூபாய் கேட்டார். அவ்வளவு தொகை என்னிடம் இல்லை என்று என் கணவர் கூறியதால், மிரட்டி பணம் பறிக்க முயன்றார்.
அப்படி இருந்தும், என் கணவர் தனக்கு தெரிந்த நபர் வாயிலாக, குறைந்த விலையில் உள் அலங்கார வேலைகளை செய்ய ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
பணம் தரவில்லை என்பதற்காக, எங்கள் திருமண நாளில் இடியை துாக்கி தலையில் போடுவது போல, பாலியல் தொல்லை புகார் அளித்து, சஸ்பெண்ட் செய்ய வைத்துள்ளார். என் கணவர் காக்கிச்சட்டையை கழற்ற வேண்டும் என, அவருக்கு பின்னணியில் யாரோ உள்ளனர்.
என் கணவர் விவகாரத்தில் ஒருதலைபட்சமாக விசாரிக்கப்பட்டுள்ளது. பொய் புகார் அளித்த பெண் போலீஸ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்துள்ளேன்.
மற்றொரு பெண் போலீஸ், என் கணவர் மீது புகார் அளித்திருப்பது பற்றி எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.