ஆம்ஸ்ட்ராங் கொலையாளிக்கு அடைக்கலமா? ரஜினி பட இயக்குனர் மனைவியிடம் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிக்கு அடைக்கலமா? ரஜினி பட இயக்குனர் மனைவியிடம் விசாரணை
ADDED : ஆக 21, 2024 09:14 AM

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி, 'சம்பவம்' செந்திலின் கூட்டாளிக்கு அடைக்கலம் கொடுத்தாரா என்ற கோணத்தில், ரஜினி பட இயக்குனரின் மனைவியிடம், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடிகள், கூலிப்படையினர், வழக்கறிஞர்கள் என, 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடிகளான, 'சம்பவம்' செந்தில், சீசிங் ராஜா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அதில், செந்தில், வெளிநாட்டிற்கு தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
செந்திலின் வலது கரமாக, ரவுடி மொட்டை கிருஷ்ணன் செயல் பட்டு வந்துள்ளார். அவர் தான் ஆம்ஸ்ட்ராங் நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்த முக்கிய புள்ளி என்றும் கூறப்படுகிறது.
மொட்டை கிருஷ்ணனை மையமாக வைத்து தான், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதி திட்டம் தீட்டப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால், செந்தில், மொட்டை கிருஷ்ணன், சீசிங் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளின் மொபைல் போன் தொடர்புகள் குறித்த தகவல்களை சேகரித்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, கொலை நடப்பதற்கு முன்னும், பின்னும் நடந்த ஒரு சில தொடர்புகள், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.
அதிலும் குறிப்பாக, ரஜினி நடித்த, ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷா, ரவுடி மொட்டை கிருஷ்ணனுடன் பல முறை மொபைல் போனில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம் தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர்.
'கொலை நடந்த பின், மொட்டை கிருஷ்ணன் உங்களை தொடர்பு கொண்டது ஏன்; அவருடன் உங்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது.
'அவருக்கு அடைக்கலம் கொடுத்தீர்களா; வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல உதவி ஏதேனும் செய்தீர்களா?' என்ற கோணத்தில் விசாரித்து, அவரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், தலைமறைவாக உள்ள மொட்டை கிருஷ்ணனை பிடிக்க லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.