வெளிநாட்டு உயிரினங்கள் குறித்த வழிகாட்டுதல் அறிக்கை வெளியீடு
வெளிநாட்டு உயிரினங்கள் குறித்த வழிகாட்டுதல் அறிக்கை வெளியீடு
ADDED : மே 05, 2024 12:47 AM
சென்னை:தமிழகத்தில் உள்ள, வெளிநாட்டு உயிரினங்களின் இருப்பை அறிவிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, பொது மக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ரமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்தியாவில் வெளிநாட்டு இனங்களின் வர்த்தக சந்தை அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் தேவை, கொடிய சட்ட விரோத வன விலங்கு வர்த்தகத்திற்கு ஊட்டமளிக்கிறது.இது சம்பந்தப்பட்ட இனங்களின் அழிவுக்கு, முக்கிய காரணமாக திகழ்கிறது.
வன விலங்கு பாதுகாப்பு திருத்த சட்டத்தின்படி, செல்லப்பிராணி வர்த்தகத்தில், எந்த இந்திய வகை பறவைகளும் அனுமதிக்கப் படுவதில்லை; பூர்வீகமற்ற வெளிநாட்டுப் பறவைகள் அனுமதிக்கப்படுகின்றன.
வெளிநாட்டு இனங்களின் வர்த்தகம் அல்லது இனப்பெருக்கம், அந்தந்த மாநில தலைமை வன விலங்கு காப்பாளரால் வழங்கப்படும் உரிமத்தின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்படும். தமிழக அளவில் வெளிநாட்டு இனங்களை அடையாளம் காணுதல், தேவையான வசதிகளை சரிபார்த்தல், வெளிநாட்டு இனங்களை கண்காணிப்பதற்கான நடைமுறைகளை தரப்படுத்துதல் ஆகியவற்றுக்காக, சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக வனத்துறை, இங்குள்ள வெளிநாட்டு உயிரினங்களின் இருப்பை அறிவிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி உள்ளது.
இந்த அறிக்கை, பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்காக, வனத் துறையின், forests.tn.gov.in/tn-forest-dept-publications என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொது மக்கள் நேற்றைய தேதியில் இருந்து, பத்து நாட்களுக்குள், cwlw_wildlife3@yahoo.in என்ற இ - மெயில் முகவரிக்கு, தங்கள் கருத்துக்களை அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.