'காட்சி பொருளான தெய்வ திருமேனிகள்' பொன் மாணிக்கவேல் வேதனை
'காட்சி பொருளான தெய்வ திருமேனிகள்' பொன் மாணிக்கவேல் வேதனை
ADDED : ஜூலை 01, 2024 03:04 AM

திருச்சி: திருச்சியில் நேற்று நடந்த ஆன்மிக அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில், ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் பேசியதாவது:
நாடு முழுதும் உள்ள 3.50 லட்சம் விக்ரகங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதை, அரசு தரப்பில் இதுவரை செய்யவில்லை. தொல்லியல் துறையினரும் பழமையான வரலாற்று ஆதாரங்களை திரட்டி, பதிவு செய்வதில்லை.
திருவெண்காடு கோவிலில் புதைந்து கிடந்த விக்ரகங்கள், 1925, 1951ம் ஆண்டுகளில் மீட்கப்பட்டு, தஞ்சாவூர் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை அருங்காட்சியகத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிலையை காட்சிப் பொருளாக வைத்துள்ளனர்.
முன்னோர்கள் படையெடுப்பு கால கட்டங்களில் தெய்வங்களின் உலோக திருமேனிகளை மண்ணில் புதைத்து வைத்தனர். தமிழகம் உட்பட பல கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்ட 35 தெய்வ திருமேனிகள், விக்டோரியா அண்டு ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை மீட்டுக் கொண்டு வர அரசிடம் சக்தி இல்லை. இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட, 1,414 விக்ரகங்கள் வாஷிங்டனில் உள்ளன. விக்ரகங்களை கொள்ளையடித்து, வெளிநாட்டுக்கு விற்ற சுபாஷ் சந்திர கபூரை, 2012ல் பிடித்துக் கொடுத்தேன். மீட்கப்பட்ட தெய்வத் திருமேனிகள், மக்கள் வழிபாட்டுக்கு கோவில்களில் ஒப்படைக்கப்படவில்லை.
அரசு அதிகாரிகளிடம் இது பற்றி எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. நம் தெய்வ திருமேனிகளை காட்சிப் பொருளாக வைத்து கேவலப்படுத்தக் கூடாது என்பது தான் என் நோக்கம்.
இந்தியா முழுதும் மொத்தம், 2,622 விக்ரகங்கள் திருடப்பட்டுள்ளன; 1,414 விக்கிரகங்கள் மட்டுமே போலீஸ் விசாரணையில் உள்ளன.
வழக்குகள் தொடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் தான் உள்ளது. ஆனால், அரசு செத்த பூனை போல் கிடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.