5 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு விடாமல் கொட்டப்போகுது மழை
5 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு விடாமல் கொட்டப்போகுது மழை
ADDED : மே 17, 2024 02:00 AM

சென்னை:கன்னியாகுமரி, தென்காசி உட்பட ஐந்து மாவட்டங்களில், நான்கு நாட்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இன்று முதல், 20ம் தேதி வரை, ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:
மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளிலும், தென்மாநில கடலோரப் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், நான்கு நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழை நீடிக்கும்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்
விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதி யிலும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்
நாளை, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்
திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யும்
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம் 29 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 55 கி.மீ., வேகம் வரை சூறாவளிக் காற்று வீசும்.
மீனவர்கள் இன்று முதல், 20ம் தேதி வரை, மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அதேபோல், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளுக்கு, நாளை முதல் 20ம் தேதி வரை செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, பட்டுக்கோட்டையில் 16 செ.மீ., மழை பெய்துள்ளது. சிங்கம்புணரி, 14; மன்னார்குடி, 13; மணமேல்குடி, அதிராமப்பட்டினம், மதுக்கூர் 11 செ.மீ., மழை பெய்தது.
மேலும், 70க்கும் மேற்பட்ட இடங்களில், 1 முதல், 10 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.

