ADDED : மே 30, 2024 10:08 PM
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ., தலைமையிலான கூட்டணி, இந்தியா முழுதும் 400க்கும் கூடுதலாக இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தில் அக்கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறும். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அரசு துறையில் காலியாக உள்ள 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தி.மு.க., கூறியது.
ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை 2,758 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தேர்வாணையம் நடத்திய தோட்டக்கலை அலுவலர், வேளாண் அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், நேர்முக தேர்வில் தேர்வாகவில்லை. எழுத்து தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தவறு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
அதனால், தமிழக அரசின் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வில், நேர்முக தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆந்திரா மாநிலத்தில் சில ஆண்டுளுக்கு முன், இப்படிப்பட்ட தேர்வுகளுக்கு நடத்தப்பட்டு வந்த நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்தை கொண்டு வரவேண்டும் என. அரசுக்கு கோரிக்கை வைத்தேன். இதைத் தொடர்ந்து வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் 26 வகையான சான்றிதழ்கள், பட்டா மாற்றம் உள்ளிட்ட சான்றிதழ் கோரும் மனுக்கள் மீது, 16 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என வருவாய்த்துறை ஆணையர், ஆணை பிறப்பித்துள்ளார்; அது வரவேற்கத்தக்கது. சேவை பெறும் உரிமை சட்டத்தை வரும் சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில், போலியான பெயரில் நிதி ஒதுக்கி முறைகேடுகள் நடந்துள்ளது. முறைகேடு தொடர்பாக நாகை, திருவள்ளூர் மாவட்டங்களில் 50 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பப் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுபோல மற்ற இடங்களில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
விக்கிரவாண்டி, கும்பகோணம், தஞ்சாவூர் சாலை நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் கடந்த 2017ல் துவங்கப்பட்டது. இந்த பணிகள் துவங்கி 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை முடக்கப்படவில்லை.
இந்த பணிகளை விரைந்து முடிக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா ஹிந்துத்துவா தலைவர் என அண்ணாமலைக்கு தெரிகிறது. அவரது பார்வை அப்படி உள்ளதால், அதை அவர் கூறுகிறார். அதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
-நமது நிருபர்-