ADDED : ஏப் 10, 2024 09:56 PM

சென்னை:கடலுார் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்ததாக, ஜோதிடர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன், பிரபல நடிகர் ஒருவர் வீட்டில் கிளிகளை வளர்ப்பதாக புகார் வந்தது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பி, வனத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் இருந்த கிளிகள் மீட்கப்பட்டதுடன், நடிகருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கிளிகள் வளர்ப்பது குற்றமா என்பது குறித்து, மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது. கிளி உள்ளிட்ட பறவைகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் தவறு என, வனத் துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து, வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீடுகளில் கிளிகளை வளர்ப்பது நீண்ட காலமாக பழக்கத்தில் உள்ளது. கடந்த 1990 - 91ல் ஏற்பட்ட சர்வதேச உடன்பாடு அடிப்படையில், கிளிகளை வளர்ப்பதற்கு மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டது.
தடை குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இதனால், விபரம் புரியாமல் பலரும் கிளிகளை வளர்த்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட நகரங்களில், 'ஆன்லைன்' மற்றும் கடைகள் வாயிலாக ஆண்டுக்கு, 700 கிளிகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிளி, 300 முதல், 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
வீடுகளில் கூண்டுகளில் கிளிகளை வளர்ப்போர், தாங்களாக முன்வந்து அவற்றை விடுவிக்க, கடந்த ஆண்டு இயக்கம் துவங்கப்பட்டது. இதன் காரணமாக, 1,000க்கும் மேற்பட்ட கிளிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
தற்போதும், விதிமுறைகள் தெரியாமல், வீடுகளில் யாராவது கிளிகளை வளர்த்தால், அவர்களை எச்சரித்து கிளிகளை விடுவிக்க அறிவுறுத்துகிறோம். இதை மீறி கிளிகளை தொடர்ந்து வளர்க்க முற்பட்டால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, சம்பந்தப்பட்ட நபருக்கு 25,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

