கள்ளர் சீரமைப்பு பள்ளி விவகாரம்: இ.பி.எஸ்., எச்சரிக்கை
கள்ளர் சீரமைப்பு பள்ளி விவகாரம்: இ.பி.எஸ்., எச்சரிக்கை
ADDED : ஆக 24, 2024 11:12 PM
சென்னை:'கள்ளர் சீரமைப்பு விடுதிகளை, கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் நிர்வாகத்தில் இருந்து விடுவித்து, தி.மு.க., அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்யும் வரை, அ.தி.மு.க.,வின் போராட்டங்கள் தொடரும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துஉள்ளார்.
அவரது அறிக்கை:
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க முயற்சிக்கும் அரசை கண்டித்தும், அவற்றை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியின் முதற்படியாக, கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த விடுதிகளை, அந்த நிர்வாகத்தில் இருந்து விடுவித்து வெளியிடப்பட்ட அரசாணையை கைவிட வலியுறுத்தியும், அ.தி.மு.க., சார்பில், நேற்று மதுரையில் உண்ணாவிரதம் நடந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் ஒரு வெற்று அறிக்கை வழியாக, போராட்டத்தின் தீவிரத்தன்மையை குறைத்திடலாம் என எண்ணிய தி.மு.க., அரசின் சூழ்ச்சிகள் அனைத்தையும், சமுதாய அமைப்புகளும், பொது மக்களும் முறியடித்துள்ளனர்.
விளிம்பு நிலை சமுதாய மக்களின் கோரிக்கைகளை பிரதிபலிக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க., என்பதை, இந்த போராட்டம் மீண்டும் மெய்ப்பித்துள்ளது.
போராட்டத்தின் வலிமையை உணர்ந்து, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளின் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கான எண்ணத்தை, முதல்வர் முழுதுமாக கைவிட வேண்டும். கள்ளர் சீரமைப்பு விடுதிகளை, கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் நிர்வாகத்திலிருந்து விடுவித்து, தி.மு.க., அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்யும் வரை போராட்டங்கள் தொடரும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

