ADDED : மார் 03, 2025 06:34 AM

நாமக்கல் ; மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றக்கோரி, கன்னட அமைப்புகள் வரும், 11ல் தமிழக எல்லையில் முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவுக்கு மின்சாரம் அனுப்புவதை தடை செய்யக்கோரி, வரும், 31ல் நெய்வேலி அனல்மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை, விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி அறிக்கை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டினால், தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில், 16 லட்சம் ஏக்கருக்கு மேல் உள்ள விளைநிலங்கள் பாசன வசதியின்றி பொய்த்து விடும். தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும்.
கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் நடத்தும் போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நெய்வேலி அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில், ஒரு யூனிட் கூட கர்நாடகாவுக்கு கொடுக்கக்கூடாது.
இதை வலியுறுத்தி, விவசாயிகளை ஒன்று திரட்டி, வரும், 31ல் நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.