மனை பத்திரங்கள் மறு ஆய்வு பதிவுத்துறை ஐ.ஜி., உத்தரவு
மனை பத்திரங்கள் மறு ஆய்வு பதிவுத்துறை ஐ.ஜி., உத்தரவு
ADDED : ஜூன் 20, 2024 11:03 PM
சென்னை:அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை தொடர்பான புகார்களை அடுத்து, மனை பத்திரங்களை தணிக்கை மாவட்ட பதிவாளர்கள், மறு ஆய்வு செய்ய வேண்டும் என, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
உரிய திருத்தங்கள்
தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகள் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய தடை உள்ளது. இதற்காக பதிவு சட்டத்தில் உரிய திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பல்வேறு பகுதிகளில் அங்கீகாரமில்லாத மனைகள் பதிவாகின்றன.
கடந்த மூன்று மாதங்களில், அங்கீகாரமில்லாத மனை பத்திரங்கள் அதிகம் பதிவானது தெரியவந்துள்ளது. இதை, சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சுட்டிக்காட்டிய அமைச்சர் மூர்த்தி, மாவட்ட பதிவாளர்களை எச்சரித்தார்.
இந்நிலையில், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அனைத்து டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:
அங்கீகாரமில்லாத மனைகள், மனைப்பிரிவுகள் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்யக்கூடாது என்றும், இதற்கான வழிமுறைகள், 2015, 2018ம் ஆண்டுகளில் தனித்தனி சுற்றறிக்கைகள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டன.
இந்த அறிவுறுத்தல்களை பலரும் மீறியுள்ளதாகவும், இந்த பதிவுகளை தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் கண்டு கொள்ளாமல் விட்டதும் தெரியவந்துள்ளது.
எனவே, இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி, அனைத்து தணிக்கை மாவட்ட பதிவாளர்களும், மனை பத்திரங்களை மறு ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும்.
விபரங்கள்
சார் - பதிவாளர் அலுவலகம் வாரியாக, அங்கீகாரமில்லாத மனைகள் தொடர்பாக பதிவான பத்திரங்களின் விபரங்களையும், இவ்வாறு பதிவாகவில்லை என்றால், அதன் விபரங்களையும் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
அனைத்து மண்டல டி.ஐ.ஜி.,க்கள், இந்த பணிகைளை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

