'ஆழமாக வேர் விடும் மரங்கள் வளர்த்தால் நிலச்சரிவை தடுக்கலாம்!'
'ஆழமாக வேர் விடும் மரங்கள் வளர்த்தால் நிலச்சரிவை தடுக்கலாம்!'
ADDED : ஆக 06, 2024 01:41 AM

சென்னை:'மலைப் பகுதிகளில், அதிக ஆழத்துக்கு வேர் விடும் மரங்களை வளர்த்தால், நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்கலாம்' என, சூழலியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.
'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், பாரம்பரியமான சோலை காடுகள் உள்ள இடங்களில், நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை. யூக்கலிப்டஸ், சவுக்கு போன்ற மரங்கள், தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ள இடங்களில் மண் வளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக, இவ்வகை மரங்கள் வளர்க்கப்பட்டன. ஆனால், தற்போது இந்த மரங்களால் கிடைக்கும் பயனை விட ஆபத்து அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
அதிக ஆழத்துக்கும், பரப்பளவுக்கும் வேர் விடும் மரங்களை வளர்ப்பதால், மண் அடுக்குகளில் பிடிப்பு தன்மை ஏற்படும். இத்துடன் பாரம்பரிய புற்கள் வளர்ப்பதும், மண்ணில் அரிப்பு போன்ற பாதிப்புகளை தடுக்கும்.
குறிப்பாக, கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலை தோட்டங்களுக்கு நடுவில், சில இடங்களில் சோதனை முறையில் சோலை மரங்கள், பாரம்பரிய புல் வகைகள் வளர்க்கப்பட்டன.
இப்பகுதிகளில் நிலத்தின் உயிர் சூழல் மேம்பட்டதுடன், வன உயிரினங்கள் வருகையும் அதிகரித்துள்ளன.
யானை உள்ளிட்ட வன உயிரினங்களை முறையாக பாதுகாப்பதால், வனப்பகுதியின் உயிர் தன்மை பாதுகாக்கப்படும். நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.