'சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது': போட்டு தாக்கினார் பழனிசாமி
'சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது': போட்டு தாக்கினார் பழனிசாமி
ADDED : ஏப் 08, 2024 06:28 AM

திருவள்ளூர் : ''தமிழகத்தில் போதை கலாசாரம் மேலோங்கி உள்ளது. இதை தடுக்க முடியாமல் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது,'' என, அ.தி.மு.க, பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
திருவள்ளூர் லோக்சபா தனி தொகுதிதே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து, பழனிசாமி நேற்று திருவள்ளூரில் பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: பா.ஜ., தலைமையிலான மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு எவ்வித நன்மையும் கிடைக்காது என்பதை உணர்ந்து, அந்த கூட்டணியில் இருந்து விலகினோம்.
பச்சோந்தி
கடந்த 14 ஆண்டுகளாக தி.மு.க., மத்திய அரசிடம் பச்சோந்தி போல் ஒட்டிக்கொண்டு, தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்து வருகிறது.
இதை பொதுமக்கள் உணர்ந்து, மத்தியில் நியாயமான ஆட்சி உருவாக்க வேண்டும். தமிழகத்தில் போதை கலாசாரம் மேலோங்கி உள்ளது. இதை, விடியா தி.மு.க., அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
'நீட்' தேர்வை ரத்து செய்வேன் என ரகசியம் கூறிய அமைச்சர் உதயநிதி, அதை வெளிப்படுத்தாமல் மவுனம் காத்து வருகிறார்.
ஆமை வேகம்
பா.ஜ., அரசு, தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்என்பதற்காக நாங்கள் போராடி வருகிறோம்.
திருவள்ளூர் மாவட்டத்தில், ரயில்வே மேம்பால பணிகள், தேசிய நெடுஞ்சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன; விரைவுபடுத்த தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வில்லை.
இதை மக்கள் உணர்ந்து, மத்தியில் யார் ஆளவேண்டும் என கருத்தில் கொண்டு,அ.தி.மு.க, கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

