ADDED : ஜூலை 01, 2024 03:12 AM

பவானி: ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 58; கட்டட தொழிலாளி. இவரது மனைவி ஜோதிமணி, 55. நேற்றிரவு போதையில் வந்த கலைச்செல்வனுக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது.
தன் தங்கை கல்பனா, 36, என்பவருக்கு ஜோதிமணி தகவல் தெரிவித்தார். கல்பனா இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தார். அப்போது, கத்தரிக்கோலால் மனைவியை கலைச்செல்வன் குத்த முயன்றார். கல்பனா தடுத்துள்ளார்.
ஆத்திரமடைந்த கலைச்செல்வன், கல்பனா வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில், சுருண்டு விழுந்து கல்பனா பலியானார்.
அதன் பின்பும் ஆத்திரம் அடங்காமல், மனைவியின் வயிற்றில் குத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். உயிருக்கு போராடிய ஜோதிமணியை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திரண்ட உறவினர்கள் கலைச்செல்வனை சரமாரியாக தாக்கினர். இதில், காயமடைந்த நிலையில், பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.