மகளிர் விடுதிக்கு ஜி.எஸ்.டி., பொருந்தாது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மகளிர் விடுதிக்கு ஜி.எஸ்.டி., பொருந்தாது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 22, 2024 11:19 PM
சென்னை:'பணிபுரியும் மகளிர், மாணவியருக்காக, விடுதி அறைகளை வாடகைக்கு விட்டால், அதற்கு ஜி.எஸ்.டி., விதிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகளிர் விடுதி நடத்துபவர்கள், ஜி.எஸ்.டி., விலக்கு பெற தகுதியில்லை; ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருமானால், அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.
விடுதியில் வழங்கப்படும் உணவு உள்ளிட்ட சேவைக்காக, 18 சதவீத வரி விதிக்கப்படும் என, மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, மகளிர் விடுதி உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவு:
ஜி.எஸ்.டி.,க்கு விலக்கு அளித்த அறிவிப்பாணையில், குடியிருப்புக்காக இடத்தை வாடகைக்கு விடுவதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புக்காக கட்டடத்தை, இடத்தை வாடகைக்கு விடப்பட்டதை, ஹோட்டல் உடன் ஒப்பிட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது; இதை ஏற்க முடியாது.
இந்த வழக்கை பொறுத்தவரை, பணிபுரியும் மகளிருக்காகவும், மாணவியருக்காகவும், விடுதிகளை மனுதாரர்கள் நடத்துகின்றனர். அறைகளில் தங்குவதற்காக, அவர்கள் வாடகை கொடுக்கின்றனர்.
பொதுவான சமையல் அறையை பயன்படுத்தி, உணவு சமைத்து அவர்கள் பரிமாறி கொள்கின்றனர். இதற்கு, ஜி.எஸ்.டி., பொருந்தாது. அதேநேரத்தில், வணிக காரணங்களுக்காக அந்த இடத்தை வாடகைக்கு விட்டால், அதற்கு ஜி.எஸ்.டி., விதிப்பு பொருந்தும்.
எனவே, குடியிருப்புக்காக மட்டுமே மாணவியர் மற்றும் பணிபுரியும் பெண்களுக்காக, விடுதி அறைகளை வாடகைக்கு விடுபவர்கள், ஜி.எஸ்.டி., விலக்கு பெற உரிமை உள்ளது. அதனால், ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

