மதுரை எம்.பி., வெங்கடேசனுக்கு வி.எச்.பி., எச்சரிக்கை
மதுரை எம்.பி., வெங்கடேசனுக்கு வி.எச்.பி., எச்சரிக்கை
ADDED : ஜூலை 04, 2024 02:47 AM
மதுரை: 'லோக்சபாவில் செங்கோல் குறித்து பேசிய அவதுாறு கருத்துக்களை திரும்ப பெறாவிட்டால் மதுரை எம்.பி., வெங்கடேசனை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்' என விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்துள்ளது.
மதுரையில் மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகரன் கூறியதாவது: தி.மு.க., தயவில் வெற்றி பெற்ற மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் தி.மு.க.,வினரின் மனதை குளிர வைக்க ஹிந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து அவதுாறு கருத்துக்களை பரப்பி வருகிறார். லோக்சபாவில் திருவாவடுதுறை ஆதினம் தந்த செங்கோல் குறித்து அவதுாறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழர்களையும் தமிழக பண்பாட்டையும் கேவலப்படுத்தி உள்ளார். தனது கருத்துக்களை அவர் வாபஸ் பெற வேண்டும். தவறினால் வி.எச்.பி., போராட்டங்களில் ஈடுபடும். தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராகவும் தமிழ் பாரம்பரியத்திற்கு எதிராகவும் பேசி வரும் வெங்கடேசன் போன்றவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.
பாதிரியாருக்கு கண்டனம்
கோவை சி.எஸ்.ஐ., பாதிரியார் ஒருவர் தன் மதத்தை பற்றியும், சடங்கை பற்றியும் பேசாமல் ஹிந்து மத சடங்குகளை இழிவுப்படுத்தியும் ஹிந்து மக்களை இழிவுபடுத்தியும் பிரார்த்தனை கூட்டத்தில் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.