கனடாவில் கை நிறைய சம்பளம் ஆள் கடத்தலில் ஈடுபட்டவர் கைது
கனடாவில் கை நிறைய சம்பளம் ஆள் கடத்தலில் ஈடுபட்டவர் கைது
ADDED : மார் 01, 2025 01:44 AM
சென்னை: கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சட்ட விரோதமாக ஆள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த முக்கிய புள்ளியை, தமிழக போலீசாருடன் இணைந்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்த நபர்களிடம், கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
எட்டு பேர் சிக்கினர்
இக்கும்பலைச் சேர்ந்தோர், இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் ஆட்களை ஏற்றி வந்து, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தங்க வைத்து, சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக, கர்நாடக மாநிலம் மைசூர் போலீசாருடன், அதிரடி சோதனையில் ஈடுபட்டு, 2021ல் இலங்கையைச் சேர்ந்த எட்டு பேரை கைது செய்தனர்.
அதேநேரத்தில், ஆள் கடத்தல் கும்பலின் தலைவர்களாக செயல்பட்ட, முகமது இப்ராஹிம், இம்ரான் ஹஜ்யார் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர்.
இவர்களில் முகமது இப்ராஹிம், சென்னையில் பதுங்கி இருப்பது, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து, தமிழக காவல் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து, முகமது இப்ராஹிமை நேற்று கைது செய்தனர். இம்ரான் ஹஜ்யாரை தேடி வருகின்றனர்.
பல லட்சம் வசூல்
இதுகுறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
இலங்கையைச் சேர்ந்தவர்களை, முகமது இப்ராஹிம் கள்ளத்தோணியில் நடுக்கடல் வரை ஏற்றி வருவார்.
அதன்பிறகு, சிறிய படகுகளில் ஏற்றி வந்து, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தங்க வைப்பார். அங்கிருந்து ரயில் மற்றும் கார்களில் சென்னை அழைத்து வருவார். சிலரை ரயிலில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அனுப்பி வைப்பார். அதற்காக பல லட்சம் ரூபாய் வசூலிப்பார்.
பிறகு அவர்களுக்கு போலி ஆவணங்கள் வாயிலாக, பாஸ்போர்ட் தயாரித்து, சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இது விசாரணையில் தெரிய வந்தது. இவர் உட்பட, 10 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.