UPDATED : மார் 22, 2024 12:48 PM
ADDED : மார் 22, 2024 12:48 AM
சென்னை:கோவை மாவட்டத்தில், ஈஷா மையத்தில் தன்னார்வலராக பணியாற்றியவர் மாயமானது குறித்து, போலீஸ் தரப்பில் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருமலை என்பவர் தாக்கல் செய்த மனு:
என் சகோதரர் கணேசன், ஈஷா யோகா மையத்தில் சேவை செய்து வந்தார். கடந்த ஆண்டு மார்ச் 2ல், ஈஷா மையத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு, சகோதரர் கணேசன் இங்கு வந்துள்ளாரா என்று கேட்டனர்.
இரண்டு நாட்களாக மையத்துக்கு அவர் வரவில்லை என்றும் தெரிவித்தனர். அவரை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஈஷா யோகா மையத்தின் பொறுப்பாளர் தினேஷ் என்பவர், கடந்த ஆண்டு மார்ச் 5ல், ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மெத்தனமாக செயல்படுகின்றனர். இதனால், எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. என் சகோதரரை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் 'கடந்த 2016 முதல் வெவ்வேறு தேதிகளில் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். அதுகுறித்து, விசாரணை நடக்கிறது' என்றார்.
இதையடுத்து, காணாமல்போனவர்கள் தொடர்பான வழக்கை துரிதப்படுத்தவும், இந்த வழக்கில் போலீஸ் பதில் அளிக்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, ஏப்ரல் 8க்கு தள்ளி வைத்தனர்.

