கல்லுாரிகளுக்கு அகரமுதலி அகராதி வழங்க அமைச்சர் அறிவுறுத்தல்
கல்லுாரிகளுக்கு அகரமுதலி அகராதி வழங்க அமைச்சர் அறிவுறுத்தல்
ADDED : ஆக 24, 2024 08:57 PM
சென்னை:“தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளுக்கும், அகர முதலி இயக்கக அகராதிகளை வழங்க வேண்டும்,” என அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தினார்.
தமிழ் வளர்ச்சித் துறையின், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அத்திட்ட செயல்பாடுகள் குறித்து, அமைச்சர் சாமிநாதன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
அகர முதலி இயக்கக அகராதிகளை, கல்லுாரிகள், பல்கலைகள், அரசு பொது நுாலகங்கள் வழியாக, மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகங்களான, தமிழ் வளர்ச்சி இயக்கம், உலகத் தமிழ் சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் பல்கலை மற்றும் பிற அரசு நிறுவனங்களில் உள்ள விற்பனை மையங்களில், அகராதிகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும்.
அனைத்து கல்லுாரிகளுக்கும், அகர முதலி இயக்கக அகராதி களை வழங்கவும், அரசால் நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி மையங்கள், அண்ணா மேலாண்மை பயிற்சி மையம் போன்ற இடங்களில், இந்த அகராதிகளை பயன்பாட்டுக்கு கொண்டு சேர்க்கவும் வேண்டும்.
அகர முதலி இயக்கக பொன்விழா ஆண்டையொட்டி, அகரமுதலி நுால்களை, 50 சதவீதம் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்ய வேண்டும்.
காலத்திற்கேற்ற வகையில், மேம்படுத்தப்பட்ட ஆங்கிலம் - தமிழ் அகராதி, தற்கால தமிழ் அகராதி ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குனர் அருள் பங்கேற்றனர்.