கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது அதிகாரிகளுக்கு அமைச்சர் நேரு அறிவுரை
கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது அதிகாரிகளுக்கு அமைச்சர் நேரு அறிவுரை
ADDED : பிப் 15, 2025 12:45 AM
சென்னை:“கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது. மற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படும்,” என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், அமைச்சர் நேரு தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதன்பின், அமைச்சர் நேரு அளித்த பேட்டி:
தமிழகத்தில், 70 சதவீத மக்கள் நகர்ப்புற பகுதிகளை சார்ந்து இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான சாலை, குடிநீர், கழிவுநீர், மின் விளக்கு, பூங்காக்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற திட்டப் பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னையில் மழை வெள்ளம் பாதிக்காதவாறு, மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது போல, மற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படும்.
மேலும், சாலைகள், குடிநீர், கழிவுநீர், கழிப்பறை, மின் மயானம், சந்தை ஆகிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 40 ஆண்டுகளுக்கு மேலான குடிநீர் குழாய்களை மாற்றி, மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள 134 நகராட்சிகள், 24 மாநகராட்சிகளில், பல்வேறு நிதி ஆதாரங்களை வைத்து, நான்கு ஆண்டுகளில் 29,084 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. இவை, 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற வழக்கு காரணமாக தாமதமான 10 சதவீத பணிகளும் தற்போது நடந்து வருகின்றன.
மேலும், செங்கல்பட்டு, வேலுார் மண்டலங்களில் உள்ள 39 நகராட்சிகள், ஆறு மாநகராட்சிகளில், 7,862 கோடி ரூபாய் மதிப்பில் பஸ் நிலையங்கள், சந்தைகள், அறிவுசார் மையங்கள், சாலைகள், பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. எனவே, நகராட்சி நிர்வாகத்தில் நிதி சிக்கல் என்பது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.