பிஎச்.டி., படிப்பில் தரமில்லை அமைச்சர் பொன்முடி ஆதங்கம்
பிஎச்.டி., படிப்பில் தரமில்லை அமைச்சர் பொன்முடி ஆதங்கம்
ADDED : ஆக 06, 2024 12:59 AM
சென்னை:'பல்கலைகளில் வழங்கப்படும் பிஎச்.டி., படிப்புகளில் தரம் இல்லை' என, துணை வேந்தர்களிடம் அமைச்சர் பொன்முடி குறை சொன்ன தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாநில உயர் கல்வி மன்றத்தில், அமைச்சர் பொன்முடி தலைமையில் துணைவேந்தர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
நிதிச்சுமை
அதில், பல்கலைகளின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லுாரிகளின் பாடத்திட்டத்தின் தரம், பல்கலைகளின் நிதிச்சுமை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 13 பல்கலைகளின் துணைவேந்தர்களுடன் நடக்க வேண்டிய ஆலோசனை கூட்டம், ஒன்பது துணைவேந்தர்களுடன் நடந்தது. காரணம், நான்கு பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லை. அந்த பல்கலைகளில் இருந்து, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், துணைவேந்தர்கள், பல்கலைகளில் நிலவும் நிதி பற்றாக்குறையை விளக்கினர். தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், தணிக்கை விபரங்களையும் அமைச்சரிடம் வழங்கினர். மேலும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
அப்போது அமைச்சர் பொன்முடி, ஆராய்ச்சி படிப்பான பிஎச்.டி., உள்ளிட்ட, பல்கலைகளின் பாடத்திட்டங்களின் தரமின்மை குறித்து, அதிகாரிகள் மற்றும் துணைவேந்தர்களிடம், தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அட்டவணை
தமிழக உயர் கல்வி மன்றம் வரையறுத்து வழங்கிய பாடத்திட்டங்களை பல்கலைகள் பின்பற்றாதது குறித்தும், கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம், கால அட்டவணை பின்பற்றாதது குறித்தும் ஆதங்கப்பட்டார்.
பல்கலைகள், சிறந்த அங்கீகாரம் பெறுவதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.