எம்.எல்.ஏ., மகன், மருமகள் மீது வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு
எம்.எல்.ஏ., மகன், மருமகள் மீது வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு
ADDED : செப் 04, 2024 12:58 AM
சென்னை,: வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில், பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் மகன் மற்றும் மருமகள் மீது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி. இவரது மகன் ஆண்டோ மதிவாணன், 35; தன் மனைவி மார்லினா ஆனியுடன், 32, திருவான்மியூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இருவரும் தன்னை துன்புறுத்தியதாக, வீட்டு பணிப்பெண் அளித்த புகாரின்படி, வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளில் திருவான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும், ஜனவரி 25ல் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக, இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, இருவர் மீதான குற்றச்சாட்டுகளை தமிழில் வாசித்து விளக்கினார்.
அதற்கு தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என, இருவரும் பதிலளித்தனர்.
இதையடுத்து, இருவர் மீதும் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்த நீதிபதி, சாட்சி விசாரணைக்காக வழக்கை, வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் ஒன்று முதல் ஏழு சாட்சிகள் ஆஜராக, 'சம்மன்' அனுப்பவும் உத்தரவிட்டார்.