ADDED : மார் 09, 2025 01:20 AM

கோவை: ''மூன்றாவதாக ஒரு மொழி கற்க, தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது நவீன தீண்டாமை,'' என, மத்திய தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசு சார்பில், 'தமிழ் தமிழ்' என்று மூச்சுக்கு முந்நுாறு தடவை பேசுகின்றனரே தவிர, தமிழ் வளர்ச்சிக்காக இதுவரை உருப்படியாக எதையுமே செய்யவில்லை. ஆனால், பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் தமிழ் மொழியை உயர்த்திப் பேசுகிறார்.
எதிர்ப்பு
உலகத்திலேயே தமிழ் மொழிதான், மூத்த மொழி என்றும் பழமையான மொழி என்றும் உரக்கச் சொல்லி, தமிழ் மொழியின் பெருமையை விடாமல் பேசுகிறார். இதற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டும்.
மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளியில் படிப்பவர்கள், மூன்று மொழி படிக்கும்போது, சாதாரண அரசு பள்ளி குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்? அரசு பள்ளி மாணவர்களுக்கும் மும்மொழி கற்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை.
அதை எதிர்ப்பதாகச் சொல்லி, அரசு பள்ளி மாணவர்கள் மும்மொழி கற்க தடை ஏற்படுத்தினால், அது நவீன தீண்டாமை. தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெற்றோரையும் தனித்தனியே சந்தித்து கேட்டுப் பாருங்கள்.
ஒவ்வொருவருமே, தங்கள் குழந்தைகள் மும்மொழி படிக்க விரும்புவதை ஆழ்மனதில் இருந்து தெரிவிப்பர்.
அச்சமூட்டும் சூழல்
பத்து ஆண்டுகளாகவே, மகளிர் திறன் மேம்பாட்டுக்காக, பிரதமர் மோடி கடுமையாக உழைத்திருக்கிறார்.
ஆனால், தமிழகத்தின் நிலை என்ன? பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அச்சமூட்டும் சூழல் நிலவுகிறது. பாலியல் வன்கொடுமை அதிகம் நடக்கும் மாநிலம் என்ற பெருமைமிகு மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால், தி.மு.க., அரசு அகற்றப்பட வேண்டும். பா.ஜ., அரசு அமைய வேண்டும்.
இவ்வாறு முருகன் கூறினார்.