மோடி 3வது முறையாக பிரதமராவார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
மோடி 3வது முறையாக பிரதமராவார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
ADDED : மார் 25, 2024 04:54 AM

மரக்காணம்,: நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் போகிறார் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோவடியில், விழுப்புரம் லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து, நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.
அப்போது அவர் பேசியது:
இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல், நேரு 3 முறை பிரதமராக இருந்துள்ளார். அவரது மகள் இந்திரா 3 முறை பிரதமராக இருந்துள்ளார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக போகிறார். தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் பா.ம.க., சார்பில் 10 தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும்.
இந்த கூட்டணி கட்சியினுடைய கொள்கை, வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதுதான். விவசாயிகளுக்காக கடந்த 32 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வைத்து விவசாயிகளுக்கென தனி பட்ஜெட்டை அறிவித்து வருகிறேன்.
மேலும் மது பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும். மும்மூர்த்திகள் என் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் இந்த நாட்டில் ஒரு சொட்டு சாராயம் கூட இருக்கக் கூடாது, ஒரு சொட்டு மழை நீரும் கடலுக்குச் செல்லக்கூடாது என்ற வாரத்தை தான் கேட்பேன்.
மோடி மீண்டும் பிரதமராக வந்தால் அவரிடம் முதல் திட்டமாக கோதாவரி, கங்கை ஆறுகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேட்பேன். பல கட்சிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிரம்மாண்ட மேடைகள் அமைத்து பிரசாரம் மேற்கொள்வார்கள்.
ஆனால் நான் அவையெல்லாம் இன்றி என்னுடைய மக்கள் அவர்களுடன் சரிசமமாக அமர்ந்து உரிமையோடு வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இங்கு வந்து உங்களிடம் பிரசாரம் செய்கிறேன்.
வெற்றி தோல்வியை தீர்மானிப்பது பெண்கள்தான். எனவே பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது கிராமத்தில் மட்டுமில்லாமல் மற்ற கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள பெண்களை சந்தித்து ஓட்டு சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
பா.ம.க., கவுரவ தலைவர் மணி, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

