கோடையின் தாக்கம் அதிகரிப்பால் வறண்டது மூல வைகை ஆறு
கோடையின் தாக்கம் அதிகரிப்பால் வறண்டது மூல வைகை ஆறு
ADDED : ஏப் 09, 2024 02:48 AM

கடமலைக்குண்டு : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலை வருஷநாடு மூல வைகை ஆறு நீர்வரத்தின்றி வறண்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பல சிற்றாறுகள் ஒன்று சேர்ந்து மூல வைகை ஆறாக மாறுகிறது. மலைப்பகுதியில் துவங்கி தேனி மாவட்டம், வாலிப்பாறை, முருக்கோடை, தும்மக்குண்டு, வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனுார், அம்மச்சியாபுரம், குன்னுார் வழியாக வைகை அணையில் சேர்கிறது. மணல் படிமங்களை அதிகம் கொண்டுள்ள மூல வைகை ஆற்றில் மழைக்காலத்தில் கிடைக்கும் நீர் வரத்தால் கரையோர பகுதியில் உள்ள பாசன கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு அதிகம் இருக்கும்.
இதனால் இப்பகுதியில் ஆறு மாதத்திற்கும் மேலாக நீர் பற்றாக்குறை இல்லாத விவசாய பணிகள் தொடரும்.
கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மலைப்பகுதியில் இருந்து குறைந்த அளவில் வரும் நீரை ஆற்று மணல் உறிஞ்சி விடுகிறது. தற்போது வருஷநாடு முதல் அம்மச்சியாபுரம் வரை நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கிறது. ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் குடிநீர் இன்றி தவிக்கின்றன. கரையோர விவசாய கிணறுகள் போர்வெல்களில் நீர் சுரப்பும் குறைந்துள்ளதால் விவசாய பரப்பும் குறைந்துள்ளது. கோடை மழை தொடர்ச்சியாக பெய்தால் ஆற்றில் நீர் வரத்துக்கு வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

