ADDED : ஏப் 24, 2024 09:03 PM
தாம்பரம்:தாம்பரத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 4 கோடி ரூபாய் பணம் சிக்கிய விவகாரத்தில், எம்.எல்.ஏ.,வும், நெல்லை பா.ஜ., வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு, தாம்பரம் போலீசார், மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.
சென்னையில் இருந்து ஏப்., 6ம் தேதி, திருநெல்வேலிக்கு சென்ற, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையை சேர்ந்த சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பெருமாள் ஆகியோரிடம் இருந்து, 4 கோடி ரூபாயை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த பணம், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, நயினார் நாகேந்திரன் ஓட்டலில் இருந்து எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சதீஷ் மற்றும் நவீன் ஆகியோர், அந்த ஓட்டல் ஊழியர்கள். பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் எனவும் கூறப்படுகிறது.
இந்த பணம், நெல்லையில் ஒருவரிடம் ஒப்படைக்க இருந்ததாகவும், வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சென்னை பசுமை வழிச்சாலையை சேர்ந்த கோவர்த்தன் என்பவருக்கு, போலீசார் சம்மன் அனுப்பினர். அவரது மகன் கிேஷார், ஏப்., 14ம் தேதி, தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஏப்., 22ம் தேதி, அவரது வழக்கறிஞர் ஆஜராகி, 10 நாட்கள் அவகாசம் கோரி கடிதம் கொடுத்தார். நயினார் நாகேந்திரனின் மற்றொரு உறவினரான முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைதம்பி ஆகியேர், நேற்று முன்தினம் ஆஜராகினர்.
அப்போது, ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோரை, நயினார் நாகேந்திரனின் உதவியாளரான மணிகண்டன் கூறியதின் பேரில், அனுப்பியதாக முருகன் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன், மே 2ம் தேதி ஆஜராகும்படி தாம்பரம் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

