'நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது' விஜய் பேச்சால் திராவிட கட்சிகள் குஷி
'நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது' விஜய் பேச்சால் திராவிட கட்சிகள் குஷி
ADDED : ஜூலை 03, 2024 11:47 PM
சென்னை:''நீட் தேர்வால் தமிழக மாணவ --- மாணவியர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, தமிழக சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்,'' என, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ - மாணவியருக்கு, சட்டசபை தொகுதி வாரியாக ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, இரண்டாம் கட்டமாக நேற்று சென்னை திருவான்மியூரில் நடந்தது. விருதுகளை வழங்கி விஜய் பேசியதாவது:
'நீட்' தேர்வு தேவை இல்லை. தமிழக மாணவ - மாணவியர், குறிப்பாக கிராமப்புற ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ - மாணவியர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்பது தான் சத்தியமான உண்மை.
நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது. ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பதை, கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரான விஷயமாக பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப பாடத்திட்டம் இருக்க வேண்டும். இதை, மாநில உரிமைகளுக்காக மட்டும் கேட்கவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பார்வைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர, பலவீனம் அல்ல.
மற்றொரு முக்கியமான விஷயம், மாநில மொழியில், மாநில கல்வித் திட்டத்தில் படித்துவிட்டு, தேசிய பாடத் திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி இருக்கும்? கிராமப்புற மாணவ - மாணவியர், மருத்துவப் படிப்பில் சேர எவ்வளவு கடினமான விஷயம் என்பதை பாருங்கள்.
மூன்றாவது பிரச்னை, கடந்த மே 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. நிறைய குளறுபடி நடந்ததாக செய்தி படித்தோம். அதன்பின், நீட் தேர்வு மீதிருந்த நம்பகத்தன்மை, மக்கள் மத்தியில் போய் விட்டது. இதற்கு தீர்வு, நீட் விலக்கு தான். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
மத்திய அரசு காலதாமதம் செய்யாமல், தமிழக மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, விரைவாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.