பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு சென்னையில் என்.ஐ.ஏ., சோதனை
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு சென்னையில் என்.ஐ.ஏ., சோதனை
ADDED : ஆக 18, 2024 01:22 AM
சென்னை:தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, இளைஞர்களை மூளைச்சலவை செய்த, ஹமீது உசேனின் அலுவலகத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ஹமீது உசேன் என்பவர், 'டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்' என்ற பெயரில், 'யு டியூப்' சேனல் நடத்தி, அதன் வாயிலாக, 'ஹிஷாப் உத் தகீர்' என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்.
மேலும், அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளார். இதை மத்திய குற்றப்பிரிவு, 'சைபர் கிரைம்' போலீசார், மே மாதம் கண்டறிந்தனர்.
இதை தொடர்ந்து, ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதாரர் அப்துல் ரகுமான் உட்பட ஆறு பேரை, 'உபா' என்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்று, சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள, 10 இடங்களில் ஜூன் மாதம் சோதனை நடத்தியது.
அப்போது, மொபைல் போன்கள், லேப்டாப், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள் மற்றும் அமைப்பு தொடர்பான புத்தகங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான், அல்தாம் சாகிப் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 5ம் தேதி, என்.ஐ.ஏ., வழக்கு பதிவு செய்தது.
அதைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டை ஜான்ஜானிக்கான் சாலையில் உள்ள ஹமீது உசேன் அலுவலகத்தில், நேற்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.