'ஜாபர் சாதிக்குடன் நேரடி தொடர்புக்கு ஆதாரம் உள்ளது' ஓசூர் பிரசார கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சு
'ஜாபர் சாதிக்குடன் நேரடி தொடர்புக்கு ஆதாரம் உள்ளது' ஓசூர் பிரசார கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சு
ADDED : ஏப் 13, 2024 01:48 AM

ஓசூர்:கிருஷ்ணகிரி பா.ஜ., வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து, ஓசூர், ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, நேற்று காலை நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
ஏழைகள் உணவு இல்லாமல் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, 80 கோடி மக்களுக்கு இன்றைய தேதி வரை மட்டுமின்றி, அடுத்த, 5 ஆண்டுகளுக்கு ரேஷன் கார்டு வாயிலாக பிரதமர் மோடி இலவச கோதுமை, அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் இலவசமாக அரிசி, கோதுமை கொடுக்க ஆரம்பித்தோம். 60 வயதைக் கடந்த ஏழைகளுக்கு 'பென்ஷன்' திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
புலம்பெயர்ந்த பறவை
பிரதமர் ஏதோ புலம்பெயர்ந்த பறவை போல் வந்து செல்கிறார் என, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அவர் கூறுவதே தவறு. இந்த நாட்டில் உள்ள யாரும், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
தொழில் வளர்ச்சிக்கு அடிகோல் நாட்டியவர் பிரதமர் மோடிதான். தமிழகத்திற்கு பல்வேறு முதலீடுகளை கொண்டு வந்தது அவர் தான்.
தமிழகத்தில் ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக, போதைப் பொருட்களை இறக்குமதி செய்து, நம் இளைஞர்கள் வாழ்க்கையை பாழாக்கும். அந்த குடும்பத்தை நாம் திருப்பி ஒருமுறை கூட தேர்ந்தெடுக்கக் கூடாது.
அந்த குடும்பத்திற்கு போதைப் பொருள் விவகாரத்தில் எப்படி தொடர்பு இருக்கிறது என, நீங்கள் கேட்கலாம். கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், அந்த குடும்பத்துடன் நேரடி தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
போதைப் பொருட்கள் வாயிலாக கோடி கோடியாக சம்பாதித்து, தங்களுடைய குடும்பம் மட்டும் வாழ வேண்டும் என பார்க்கின்றனர்.
போதைப் பொருட்களால் வரக்கூடிய ஆதாயத்தில் பிழைக்கும் எந்த குடும்பமும் வாழ்ந்ததில்லை.
போதைப் பொருட்கள் ஆதாயத்தை வைத்து அரசியல் செய்யக்கூடிய அந்த குடும்பத்தை நிராகரிக்க வேண்டும்.
சாராயம் ஒன்றையே நம்மால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கக் கூடிய நிலையில், போதைப் பொருட்களை எடுத்து வரக்கூடிய இந்த குடும்பத்தை நாம் நான்கு கேள்விகள் கேட்க வேண்டும்.
போதைப் பொருள் விற்ற பணத்தை வைத்து படம் தயாரிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு எல்லாவித ஆதரவும் கொடுக்க வேண்டும் என நினைப்பவர் மோடி. ஆண்டுக்கு, 6,000 ரூபாய் நேரடியாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்துகிறோம்.
ஒரு மூட்டை உரம் இறக்குமதி செய்தால், 3,000 ரூபாய் செலவாகும். கொரோனா காலத்தில் விலைவாசி உயர்ந்தது. அப்போது என்னை அழைத்த பிரதமர், '3,000 ரூபாயானாலும் சரி; 5,000 ரூபாயானாலும் சரி. விவசாயிகளுக்கு, 298 ரூபாய்க்கு தான் உரத்தைக் கொடுக்க வேண்டும்.
மதிப்பும், மரியாதையும்
'அதனால் வரக்கூடிய நஷ்டமோ, விலை உயர்வோ, மத்திய அரசின் மேல்தான் இருக்குமே தவிர, விவசாயிகளுக்கு போகக்கூடாது' என்றார். விவசாயிகள் மேல் பிரதமர் மோடிக்கு மதிப்பும், மரியாதையும் உள்ளது.
பத்தாண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி எவ்வளவு அதிகரித்துள்ளது என்பது உங்களுக்கே தெரியும். நாட்டில் முதன்முறையாக 2019ல், ராணுவ காரிடார் எடுத்து வந்து, அதில் ஓசூரை ஒரு இடமாக தேர்வு செய்தது பிரதமர் மோடிதான்.
இன்று ராணுவ பொருட்கள் ஏற்றுமதியில், 20,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளோம். அதில், பெரும் பங்கு கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியில் இருந்து தான் வந்துள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.

