காங்., மாவட்ட தலைவர்கள் மாற்றமில்லை *மேலிட பொறுப்பாள பேச்சால் நிம்மதி
காங்., மாவட்ட தலைவர்கள் மாற்றமில்லை *மேலிட பொறுப்பாள பேச்சால் நிம்மதி
ADDED : மார் 06, 2025 11:02 PM
மதுரை:தமிழகத்தில், காங்., மாவட்ட தலைவர்கள் மாற்றம் இல்லை என மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் உறுதியளித்ததால் கட்சிக்குள் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
மாநில தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றதும், மாநிலம் முழுவதும் அவரது ஆதரவாளர்களை நிர்வாகிகளாக்க முயற்சித்தார்.
கட்சியின் மாவட்டத் தலைவர்கள் பலரும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரின் ஆதரவாளர்களாக உள்ளனர். அவர்களையும் மாற்றி விட்டு, தன்னுடைய ஆதரவாளர்களை மாவட்டத் தலைவர்களாக செல்வப்பெருந்தகை முயற்சி மேற்கொண்டார்.
இதையறிந்ததும், கட்சியின் 27 மாவட்டத் தலைவர்கள், செல்வப்பெருந்தகைக்கு எதிராக கொந்தளித்தனர். நம்மை மாற்ற முயற்சிக்கும் செல்வப்பெருந்தகையையே, கட்சிப் பொறுப்பில் இருந்து காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, மூத்த நிர்வாகிகள் சிலர் வழிகாட்டுதலோடு, டில்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு ப்ரியங்கா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் சந்தித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை ஏற்கப்படாமல், சமாதானம் சொல்லி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த வாரம் சென்னை வந்த தமிழக மேலிடப் பார்வையாளர் கிரிஷ் சோடங்கரை, கட்சியின் மாவட்ட தலைவர்கள் சிலர் சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்களிடம் பேசிய சோடங்கர், 'மாநிலத் தலைவர் பதவியில் எப்படி மாற்றம் இல்லையோ, அதைப்போலவே, தற்போதைய மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருபவர்களையும் மாற்றப் போவதில்லை. இது கட்சித் தலைமையின் முடிவு' என கூறியுள்ளார்.
இதையடுத்து, செல்வப்பெருந்தகைக்கு எதிராக கொடி பிடித்து நின்ற மாவட்டத் தலைவர்கள், 'தங்கள் பதவிக்கு இப்போதைக்கு சிக்கல் இல்லை' என தங்களுக்குள்ளேயே சமாதானமாகி விட்டனர்.