நத்தம் நிலம் பத்திரத்தை பதிய மறுக்கக்கூடாது: சார் - பதிவாளர்களுக்கு ஐ.ஜி., உத்தரவு
நத்தம் நிலம் பத்திரத்தை பதிய மறுக்கக்கூடாது: சார் - பதிவாளர்களுக்கு ஐ.ஜி., உத்தரவு
ADDED : ஜூன் 24, 2024 05:19 AM
சென்னை : தனியார் பெயரில் உள்ள நத்தம் நிலம், மனை விற்பனை தொடர்பாக பத்திரங்களை தாக்கல் செய்வோரை அலைக்கழிக்கக் கூடாது என, பதிவுத்துறை ஐ.ஜி., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும், குடியிருப்பு பயன்பாட்டுக்காக, நத்தம் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள், தனியார் அளவை செய்யப்பட்டு, சர்வே எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த சர்வே எண்கள் அடிப்படையில், பட்டா உள்ளிட்ட அனைத்து உரிமை ஆவணங்களும் அளிக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், கிராம நத்தம் நிலங்களுக்கு மனை பட்டா வழங்கப்பட்ட பின், அதுகுறித்து மறு நில அளவை செய்து, புதிய சர்வே எண்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு வழங்கப்படும் புதிய சர்வே எண்கள் அடிப்படையில், வழிகாட்டி மதிப்புகளை நிர்ணயித்து, அதை பதிவுத்துறை இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
ஆனால், பல இடங்களில் வழிகாட்டி மதிப்பு குழப்பத்தை சுட்டிக்காட்டி, நத்தம் மனைகள் தொடர்பான பத்திரங்களை, சார் - பதிவாளர்கள் பதிய மறுக்கின்றனர்.
இதுதொடர்பாக புகார்கள் வந்த நிலையில், வருவாய் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில், பதிவுத்துறை இதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்து உள்ள உத்தரவு:
புதிதாக மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ள, நத்தம் நிலங்களின் சர்வே எண் விபரங்களை, வருவாய் துறையிடம் இருந்து பெற வேண்டும்.
இதில், மாவட்ட பதிவாளர்கள், வருவாய் துறையை அணுகி, உரிய விபரங்களை பெற்று, வழிகாட்டி மதிப்பு பதிவேட்டில் சேர்க்க வேண்டும்
இதன் அடிப்படையில், அனைத்து நத்தம் நிலங்கள், மனைகளுக்கு உரிய முறையில் மதிப்பு நிர்ணயிக்க வேண்டும். நத்தம் சர்வே எண்கள் உள்ள நிலங்கள் பெரும்பாலும் குறைந்த பரப்பளவு மனைகளாக தான் உள்ளன
இந்த நிலங்கள் தொடர்பான பத்திரங்கள் பதிவுக்கு வரும் போது, மனைப்பிரிவு அங்கீகாரம் தொடர்பான கேள்விகள் எழுப்பி, மக்களை அலைக்கழிப்பதாக புகார் வருகிறது.
இந்த விஷயத்தில் ஏற்கனவே பதிவுத்துறை, 2020ல் வழங்கிய வழிகாட்டுதல்களை கடைப்பிடித்தால் போதும். இந்த தெளிவுரைகளை புரிந்து செயல்பட வேண்டும்
நத்தம் நிலம், மனை தொடர்பான பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் போது, அதை நிராகரிக்காமல், மக்களை அலைக்கழிக்காமல், சார் - பதிவாளர்கள் செயல்பட வேண்டும்.
வேண்டுமென்றே தாமதம் செய்வது தெரிந்தால், சார் - பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மண்டல டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள் உரிய சோதனை செய்து, இதை உறுதிபடுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.