
ஏப்ரல் 14, 1907
சென்னையில், ராஜகோபாலன் நாயுடு - ராஜம்மாள் தம்பதியின் மகனாக, 1907ல் இதே நாளில் பிறந்தவர் மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்ற எம்.ஆர்.ராதா. இவரது தந்தை ரஷ்யாவில் ராணுவ வீரராக பணியாற்றி, அங்கு நடந்த ஒரு போரில் மறைந்தார். தந்தை மறைவுக்குப் பின் பொறுப்பற்றுத் திரிந்த இவர், தாயிடம் கோபித்துக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை செய்தார்.
இவர் மூன்று மூட்டைகளை சாதாரணமாக துாக்கிச் செல்வதை பார்த்த, 'ஆலந்துார் பாய்ஸ்' நாடக கம்பெனி உரிமையாளர் ரங்கநாதன் தன் நாடகங்களில் நடிக்க வைத்தார். 'ரத்தக்கண்ணீர்' நாடகத்தால் புகழடைந்தார். 5,000க்கும் மேற்பட்ட முறை மேடை ஏறினார்.
இவரது பல நாடகங்கள் சினிமாவாக மாறின. ரத்தக்கண்ணீர், பாகப்பிரிவினை, பலே பாண்டியா உள்ளிட்ட படங்கள், பிறமொழிகளுக்கு மாறிய போது, இவர் பாத்திரத்தில் நடிக்க நடிகர் கிடைக்காமல் திணறியதே, இவரின் திறமைக்கு சான்று.
ஒரே நாளில், 'துாக்குமேடை' என்ற கதையை எழுதி தந்த கருணாநிதிக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் தந்தவர் இவரே. எம்.ஜி.ஆரை சுட்டதால், நடிக்கும் வாய்ப்புகளை இழந்து, மீண்டும் திரையுலகில் பிரவேசித்தார். தன் 72வது வயதில், 1979, செப்டம்பர் 17ல் மறைந்தார்.
'நடிகவேள்' பிறந்த தினம் இன்று!

