
ஏப்ரல் 19, 1957
குஜராத் ஹிந்து குடும்பத்தை சேர்ந்த திருபாய் அம்பானி - கோகிலாபென் தம்பதிக்கு மகனாக, 1957ல் இதே நாளில், பிரிட்டிஷ் காலனி நாடான ஏமனில் பிறந்தவர், முகேஷ் அம்பானி.
இவரது தந்தை தாயகம் திரும்பி, 'விமல்' என்ற ஜவுளி நிறுவனத்தை துவக்கி வணிகத்தில் ஈடுபட்டதால், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஹில் கிரேஞ்ச் பள்ளி, செயின்ட் சேவியர் கல்லுாரிகளில் படித்தார். கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்து, ஸ்டான்போர்டு பல்கலையில் எம்.பி.ஏ., சேர்ந்தார்.
தந்தை அழைத்ததால் படிப்பை கைவிட்டு, தந்தையுடன் ஜவுளி வர்த்தகத்தில் இணைந்தார். 'ரிலையன்ஸ் இன்போகாம் லிட்' நிறுவனத்தை துவக்கினார். பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பில் இறங்கினார். அமெரிக்கர் அல்லாதவராக, 'பேங்க் ஆப் அமெரிக்கா'வின் இயக்குனர் குழுவில் தேர்வானார்.
பல்வேறு தொழில்களை துவக்கி, லாபகரமாக இயக்கி, உலகின், 35 பணக்காரர்களில் ஒருவராகவும், ஆசிய பணக்காரராகவும் உயர்ந்தார். 'இவரது தனிப்பட்ட வருவாயால், மத்திய அரசு செலவுகளை, 20 நாட்களுக்கு செய்ய முடியும்' என, ஒரு வெளிநாட்டு பத்திரிகை கணித்தது. 'மும்பை இண்டியன்ஸ்' என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளரான இவர், தன் வணிகத்தால் உலக சந்தையை தக்க வைத்துள்ளார்.
இவரது, 67வது பிறந்த தினம் இன்று!

