
ஏப்ரல் 27, 1945
புதுச்சேரியில், கள் விற்பனை செய்த சாரங்கபாணி - அம்புஜம்மாள் தம்பதியின் மகனாக, 1945ல் இதே நாளில் பிறந்தவர் வைத்தியலிங்கம் எனும் பிரபஞ்சன்.
இவர், புதுச்சேரியில் பெத்தி செமினார் பள்ளியிலும், தஞ்சை கரந்தை தமிழ் சங்கத்திலும் படித்தார். தஞ்சாவூரில் தமிழாசிரியராக பணி செய்தார். பின் சென்னை வந்து, 'குங்குமம், குமுதம், ஆனந்த விகடன்' இதழ்களில் இலக்கிய, அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்களை எழுதினார்.
புதுச்சேரியின் வரலாற்றை கூறும், 'மானுடம் வெல்லும், வானம் வசப்படும்' என்ற இவரது நாவல்கள் இன்றும் விற்பனையில் முன்னணியில் உள்ளன. இதில் வானம் வசப்படும், சாகித்ய அகாடமி விருது பெற்றது.
இவரது நவீன நாடகமான, 'முட்டை' ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இவரது பல கதைகள் கல்லுாரிகளில் பாடமாக உள்ளன. பல நுால்கள் தமிழகம், புதுவை அரசு விருதுகளை பெற்றுள்ளன. இவர், தன் 73வது வயதில், 2018 டிசம்பர் 21ல் மறைந்தார். இவரது மறைவுக்கு, புதுச்சேரி அரசு மரியாதை செய்தது. இவரது பிறந்த தினம் இன்று!

