
ஏப்ரல் 30, 2001
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டைக்கு அருகில் உள்ள சேந்தமங்கலம் எனும் ஊரில் காத்தசாமி பிள்ளை - குஞ்சம்மாள் தம்பதிக்கு மகனாக, 1924, ஏப்ரல் 2ல் பிறந்தவர் கிருஷ்ணன்.
நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் படித்த இவர், தன் தாத்தா சின்னப்ப முதலியாரிடம் நாதஸ்வரமும், வாய்ப்பாட்டும் கற்றார். பின், அருப்புக்கோட்டை கணேசனிடம் முறைப்படி நாதஸ்வரம் கற்றார். தன் விடாமுயற்சி, ஈடுபாடு, தனித்திறமையால் நாதஸ்வர வாசிப்பில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கலைஞர்களுக்கு இணையாக புகழ் பெற்றார்.
வெளிநாடுகளில் கச்சேரி செய்வதிலும் முனைப்புடன் செயல்பட்டார். தியாகராஜர் கீர்த்தனைகளை புரிந்து பாட வேண்டும் என்பதற்காக, தெலுங்கு மொழி கற்றார். தன் தனித்திறனுக்காக கவரவ டாக்டர் பட்டம், கலைமாமணி, சங்கீத நாடக அகாடமி, இசை பேரறிஞர், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றார். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஆஸ்தான சங்கீத வித்வானாக, 1977ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு பெற்ற இவர், தன் 77வது வயதில், 2001ல் இதே நாளில் மறைந்தார்.
நாதஸ்வர சக்கரவர்த்தியின் நினைவு தினம் இன்று!

