
மே 16, 2004
கர்நாடக மாநிலம், மைசூரில், 1924ல், பூர்ணய்யரின் மகளாக பிறந்தவர் கமலா மார்கண்டேயா. இவர், சென்னை பல்கலையில் வரலாறு படித்து, இரண்டாம் உலகப்போரின் போது, பத்திரிகை துறையில் பணி செய்தார். சக பத்திரிகையாளரான பெட்ரான்ட் டெய்லரை மணந்து பிரிட்டனில் குடியேறினார்.
'எ நெக்டார் இன் ய ஷீவ்' எனும் இவரின் நாவல் 17 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதுடன், அமெரிக்க நுாலக அசோசியேஷனால் சிறந்த நுாலாக பாராட்டப்பட்டது. தொடர்ந்து, 'சம் இன்னர் பியூரி, எ சைலன்ஸ் ஆப் டிசையர்' உள்ளிட்ட பல நாவல்களை எழுதி, உலக வாசகர்களின் இதயத்தை கொள்ளையடித்தார்.
அமெரிக்க, பிரிட்டன் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்டவர் இவர். அதே நேரம், இவரது 12வது நாவலான, 'அமெரிக்காவில் ஷாலிமர்' மோசமாக விமர்சிக்கப்பட்டது. 2004ல் இதே நாளில் தன் 80வது வயதில் காலமானார்.
இந்தியாவில் பிறந்த ஆங்கில நாவலாசிரியர் மறைந்த தினம் இன்று!