
மே 20, 1928
தஞ்சாவூர் மாவட்டம், சிறுநாங்கூரில், கர்னாடக இசை கலைஞர் மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் -- விசாலாட்சி தம்பதியின் மகனாக, 1928ல், இதே நாளில் பிறந்தவர் மகாராஜபுரம் சந்தானம்.
பள்ளி படிப்புடன், தன் தந்தையிடமும், மெலட்டூர் சாமா தீட்சிதரிடமும், கர்னாடக சங்கீதம் கற்றார். இவர் முருகன், காஞ்சி மஹா பெரியவர் உள்ளிட்டோரைப் பற்றி ஆன்மிக பாடல்களை எழுதி, பாடினார். யாழ்ப்பாண நுண்கலைக் கல்லுாரியில் முதல்வராகவும் பணியாற்றினார். தன் தந்தை மறைந்த பின், சென்னை வந்தார்.
சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்றிய, 'போ சம்போ, மதுர மதுர' பாடல்களை பாடி பிரபலமாக்கினார். மேலும், 'உன்னை அல்லால், சதா நின் பாதமே கதி, வரம் ஒன்று, நளின காந்தி மதிம்' உள்ளிட்ட பாடல்களை பல்வேறு ராகங்களில் இயற்றி, பாடினார். திருப்பதி தேவஸ்தானம், காஞ்சி சங்கர மடம், பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா வெங்கடாஜலபதி கோவில்கள், கணபதி சச்சிதானந்தா ஆசிரமம் ஆகியவற்றின் ஆஸ்தான வித்வானாகவும் இருந்தார்.
'சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாநிதி, இசை பேரறிஞர், பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 1992, ஜூன் 24ல், தன், 64வது வயதில், வாகன விபத்தில் மறைந்தார்.
சென்னை, தி.நகர் முப்பாத்தம்மன் கோவில் மற்றும் கிருஷ்ண கான சபா உள்ள சாலையின் பெயரால் வாழும் வித்வான் பிறந்த தினம் இன்று!

