
மே 23, 1974
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில், 1918ல், சுப்பையா - அங்கமுத்து தம்பதியின் மகளாக பிறந்தவர் டி.ஏ.மதுரம். இவர், இளமையிலேயே நலங்கு பாடியும், நாடகங்களில் நடித்தும் தன் குடும்ப பொறுப்புகளை ஏற்றார். ஏ.வி.எம்.,மின், ரத்னாவளி என்ற படத்தில் அறிமுகமானார்.
ஆயினும், ராஜா சாண்டோ, புனேயில் எடுத்த தமிழ் படமான, வசந்தசேனா திரைப்படத்தில் தான் நல்ல கதாபாத்திரமும், புகழும் கிடைத்தது. இவரை அந்த படத்திற்காக தேர்வு செய்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். இருவரும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, காதலித்து மணந்தனர்.
இவர்களுக்காகவே திரைப்படங்களில் தனி நகைச்சுவை காட்சிகள் உருவாக்கப்பட்டன. லட்சுமி காந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கே.,யும் கைதாகினர். அப்போது, என்.எஸ்.கே., நாடக குழுவை நடத்தியதுடன், சட்டப் போராட்டம் நடத்தி அவரையும் விடுவித்தார். கணவரின் மறைவுக்கு பின், அவரது மற்ற இரண்டு மனைவியரின் குழந்தைகளையும் மேன்மைபடுத்தி, தன் 56வது வயதில், 1974ல் இதே நாளில் மறைந்தார்.
சிரிக்க வைத்து சோகங்களை மறைத்த மதுரம் மறைந்த தினம் இன்று!

