
ஜூன் 2, 1943
தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில், ராமசாமி - சின்னத்தாய் தம்பதியின் மகனாக, 1943ல் இதே நாளில் பிறந்தவர் இளையராஜா எனும் ராசய்யா. அண்ணன் வரதராஜன், தம்பி கங்கை அமரனுடன் இணைந்து, 'பாவலர் பிரதர்ஸ்' இசைக்குழுவில் ஹார்மோனியம் இசைத்து பாடினார்.
இசையமைப்பாளர் கனவுடன் சென்னை வந்து, தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசை நுட்பங்களை கற்று, லண்டன் டிரினிட்டி காலேஜில் தங்கப்பதக்கத்துடன் கிடார் வாசிப்பை முடித்தார்.
பஞ்சு அருணாசலம் இயக்கிய அன்னக்கிளி திரைப்படத்தில் அறிமுகமாகி, 'மச்சானை பாத்தீங்களா' பாடலால் பிரபலமானார். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசையில் பாடல்களை உருவாக்கி ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் செல்வாக்கு பெற்றார்.
பல மொழிகளில் 7,000க்கும் மேற்பட்ட பாடல்கள், 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசையமைத்து, 'இசைஞானி'யாக வலம் வரும் இவருக்கு, 'பத்ம பூஷன், பத்ம விபூஷன்' உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இசையால் உள்ளங்களை வசமாக்கிய,'மேஸ்ட்ரோ'வின் 81வது பிறந்த தினம் இன்று!

