
ஜூன் 15, 1937
தஞ்சாவூரில், 1937ல் இதே நாளில் பிறந்தவர் ப.தங்கம். இவர், சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்தார். கும்பகோணம் கவின் கலை கல்லுாரியில், பி.எப்.ஏ., முடித்து, சென்னையில், 'தினத்தந்தி' நாளிதழில் ஓவியராக பணியில் சேர்ந்து, 'கன்னித்தீவு' தொடர் உள்ளிட்டவற்றுக்கு ஓவியம் வரைந்தார்.
மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஓவிய ஆசிரியராக பணியாற்றினார். பின், தஞ்சை மருத்துவ கல்லுாரியில், ஓவியர் மற்றும் புகைப்பட கலைஞர் பணியில் சேர்ந்து, 33 ஆண்டுகள் பணி செய்தார். அப்போது, நுண்நோக்கியில் நோக்கும் மருத்துவ வடிவங்களை, புகைப்படம் எடுத்தார். அவை, பிரிட்டனில் இருந்து வெளியாகும், 'ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்' உள்ளிட்ட இதழ்களில் வெளியானது. அது மருத்துவம் சார்ந்த கட்டுரையாளர்களுக்கு உதவியது.
கல்கியின், 'பொன்னியின் செல்வன்' கதையை 10 பாகங்களாக பிரித்து, 1,050 ஓவியங்களில், 'காமிக்ஸ்' வடிவில் தந்தார். 'ஓவியனின் கதை, ராஜ கம்பீரன்' உள்ளிட்ட நுால்களை எழுதிய இவர், தன் 85வது வயதில், 2022, அக்டோபர் 27ல் மறைந்தார்.
'எழுத்தோவியர்' பிறந்த தினம் இன்று!

