ADDED : ஆக 02, 2024 12:46 AM

புதுடில்லி:இந்தியாவில், கடந்த 2023 -- 24ம் நிதியாண்டில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான காப்புரிமை வழங்கப்பட்டு இருப்பதாக இந்திய காப்புரிமை அலுவலகம் தெரிவித்து உள்ளது.
மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா பார்லியில், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை பரவலாக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அனைத்து காப்புரிமை அலுவலகங்களையும் டிஜிட்டல் மயமாக்கியதுடன், ஆன்லைனில் விண்ணப்பங்களை பரிசீலித்து வருகிறது. இதனால், காப்புரிமை அலுவலகங்களுக்கு நேரில் வர தேவையில்லை.
மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, விண்ணப்பக் கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இதனால், இப்பிரிவில், காப்புரிமை கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 2018 - -19ல் 801 ஆக இருந்தது, 2023 -- 24ல் 2,546 ஆக அதிகரித்தது.
இதே போல், புவிசார் குறியீடு கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்பிரிவில் 2023 - 24ம் நிதியாண்டில், 160 விண்ணப்பங்கள் வந்திருந்தன. 2024 ஜூன் வரை, 643 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.