ADDED : செப் 12, 2024 01:19 AM

சென்னை:'ஆன்லைன்' விளையாட்டுகள் மாணவர்களை நிழல் உலகில் உலவ வைப்பதாக, தலைமை செயலர் முருகானந்தம் தெரிவித்தார்.
சென்னை சாந்தோம் அருகே, அபிராமபுரத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனரக கட்டடத்தில், தமிழக ஆன்லைன் விளையாட்டு ஆணையம் செயல்படுகிறது.
அதன் சார்பில், 'ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்' எனும் தலைப்பில், மாநிலம் முழுதும் பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
அதன் துவக்க நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினரும், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியுமான சாரங்கன் வரவேற்றார்.
ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து, அதன் தலைவரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான நசீமுதீன் மற்றும் உள்துறை செயலர் தீரஜ்குமார் ஆகியோர் பேசினர்.
விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு, தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் பேசியதாவது:
'ஓடி விளையாடு பாப்பா' என்றார் பாரதி. ஆனால், இன்று குழந்தைகள் ஓடியும் விளையாடுவது இல்லை; கூடி விளையாடுவதும் குறைந்து விட்டது.
இணையம், கணினி, ஸ்மார்ட் போன்கள், புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளன. அதே சமயம், மாணவர்கள், இளைஞர்கள் என, பல்வேறு தரப்பினர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி அடிமையாவதும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
மனிதர்கள் கூட்டமாகத்தான் இருக்க முடியும்; அதுதான் இயற்கை. ஆனால், இதற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு மாற்றுகிறது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகள் மாணவர்களை நிழல் உலகில் உலவ வைப்பது கவலை அளிக்கிறது.
இத்தகைய விளையாட்டுகள், உடல், மன ரீதியாக மாணவர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது. கொரோனா காலகட்டத்தின் போதுதான், மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் பழக்கம் அதிகமாகியது.
அப்போதுதான், இந்த ஆன்லைன் விளையாட்டு மோகம் அவர்களிடம் அதிகரித்தது. முடிந்தவரை, குழந்தைகளின் கைகளில் இணையத்தை பயன்படுத்தி செயல்படுத்தும், ஸ்மார்ட் போன்கள் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
மாணவர்களையும், இளைஞர்களையும் கண் இமை போல காப்பதற்காகவே, இந்த விழிப்புணர்வு முகாம்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதில், ஆன்லைன் விளையாட்டில் உள்ள தொழில்நுட்பம் பற்றியும், அதற்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கேள்வி - பதில் பகுதி இடம்பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.

