ADDED : மார் 28, 2024 01:49 AM

தேனி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரனுக்காக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் 30 நிமிடங்கள் காத்திருந்தார்.
தேனி லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணி சார்பில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று மதியம் 12:30 மணிக்கு மேல் மனு தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அவரது அணி மாவட்ட செயலாளர் சையதுகான் உள்ளிட்டோர் மதியம் 1:50 மணிக்கு வந்து காத்திருந்தனர். தினகரன் மனு தாக்கலுக்கு வந்த போது கலெக்டர் அலுவலக நுழைவாயில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக மதியம் 2:25 மணிக்கு மேல் வந்தார். அவருடன் எம்.பி., ரவீந்திரநாத், பா.ஜ., நிர்வாகிகள் உடன் வந்தனர். மனு தாக்கலுக்கு வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டும் அனுமதி என்பதால், பன்னீர்செல்வம் செல்லவில்லை. ஆனால் தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனன், வழக்கறிஞர் ராஜாசெந்துார் பாண்டியன் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கலுக்குப்பின் தினகரன் பேட்டியின் போது பன்னீர்செல்வம் உடனிருந்தார்.