ரிசார்ட்டில் தங்க அனுமதி மறுப்பு சந்தாதாரருக்கு இழப்பீடு உத்தரவு
ரிசார்ட்டில் தங்க அனுமதி மறுப்பு சந்தாதாரருக்கு இழப்பீடு உத்தரவு
ADDED : ஆக 06, 2024 12:20 AM
கோவை:கோவை மாவட்டம், வேடபட்டியை பூர்வீகமாக கொண்டவர் மகேந்திரன். வெளிநாட்டில் வசித்து வந்த இவர், சென்னை, 'ஸ்டெர்லிங் ஹாலிடேஸ் ரிசார்ட்' நிறுவனத்துக்கு சொந்தமான, கேரள மாநிலம், மூணாறில் செயல்படும் விடுதியில், விடுமுறை காலத்தில் தங்குவதற்கு ஒப்பந்தம் செய்தார்
இதற்காக 23,000 ரூபாய் செலுத்தினார். 2022ல், விடுதியில் தங்குவதற்கு இ-மெயில் வாயிலாக புக்கிங் செய்தபோது, அறை ஒதுக்க மறுத்தனர். வருடாந்திர வசதி கட்டணம் செலுத்த தவறியதால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
சந்தா புதுப்பிக்க கோரி எந்த கடிதமும் வராததால், இது குறித்து விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பினார். உரிய பதில் அளிக்கப்படவில்லை. இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், 'எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர் செலுத்திய, 23,000 ரூபாயை திருப்பி செலுத்த வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.