ADDED : ஆக 28, 2024 11:41 PM
சென்னை:வழக்கறிஞருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும்படி, இந்திய பார் கவுன்சிலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில், மாதவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'வழக்கறிஞர் பி.அமர்நாத், ஆந்திர மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார்.
சென்னை, நந்தனம் சி.ஐ.டி. நகரில், எனக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. அதில், வழக்கறிஞர் அமர்நாத், வாடகைக்கு உள்ளார்.
'வாடகை தராமல் இருந்தது மட்டுமின்றி, போலி குத்தகை ஒப்பந்தம் தயார் செய்து, கட்டடத்தின் மற்றொரு பகுதியையும் எடுத்துக் கொண்டார். பார் கவுன்சிலில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க, பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறியுள்ளார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
வழக்கறிஞர் பி.அமர்நாத்திற்க்கு எதிராக, வழக்கறிஞர் சட்டம் மற்றும் பார் கவுன்சில் விதிகளின்படி, உரிய நடவடிக்கை எடுக்க, இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிடப்படுகிறது. அவருக்கு எதிரான குற்ற வழக்கின் மீது, சட்ட நடைமுறைகளை பின்பற்றி, சைதாப்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனுதாரரின் இடத்தில் இருந்து அவரை வெளியேற்றி, காலியிடத்தை ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.