கனியாமூர் தனியார் பள்ளி கலவரம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
கனியாமூர் தனியார் பள்ளி கலவரம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : மார் 29, 2024 09:40 PM
சென்னை:கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை, சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, 2022 ஜூலை 13ல் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் மரணத்துக்கு, பள்ளி நிர்வாகமே காரணம் எனக்கூறி, ஜூலை, 17ல் போராட்டம் நடந்தது.
பின், அந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. இந்தக் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணையை வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், 'வன்முறை சம்பவம் நடந்து, 20 மாதங்கள் கடந்து விட்டது. இருப்பினும், இறந்த மாணவியின் தாய், வன்முறையை துாண்டியவர்கள் எவரும், இதுவரை விசாரிக்கப்படவில்லை; வழக்கில் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.
எனவே, வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணையை, சிறப்பு புலன் விசாரணை குழுவிடம் இருந்து, வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்; மனுவுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு, சின்ன சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, ஏப்., 22க்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

