கனவு இல்லம் திட்ட பயனாளிகள் தேர்வு கிராம சபையில் ஒப்புதல் பெற உத்தரவு
கனவு இல்லம் திட்ட பயனாளிகள் தேர்வு கிராம சபையில் ஒப்புதல் பெற உத்தரவு
ADDED : மே 04, 2024 12:15 AM
சென்னை:'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்திற்கான பயனாளிகளை, கிராம சபை கூட்டம் வழியே தேர்வு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்பகுதிகளில், 8 லட்சம் குடிசை வீடுகளில், மக்கள் வாழ்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. 'குடிசையில்லா தமிழ்நாடு' என்ற இலக்கை எட்ட, 2030ம் ஆண்டுக்குள் கிராம பகுதிகளில், 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
முதல் கட்டமாக 2024 - 25ம் ஆண்டில், ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும், 3.50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும். இப்புதிய திட்டம், 'கலைஞரின் கனவு இல்லம்' என்ற பெயரில், வரும் நிதியாண்டில் 3,500 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என, 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், துாய்மை பாரத திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தவும், நடப்பு நிதியாண்டில், ஒரு லட்சம் புதிய வீடுகளை, 3,100 கோடி ரூபாயில் கட்டவும், தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, குடிசை வீட்டில் வசிப்போர், இத்திட்டத்தில் பயன்பெறலாம். குடிசை வீடு உள்ள இடத்திற்கு, பட்டா மற்றும் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர், பயன்பெற முடியாது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர், எம்.பி., - எம்.எல்.ஏ., அல்லது அவர்கள் மனைவி, கணவர் ஆகியோருக்கு சொந்தமான குடிசையாக இருந்தால், இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.
கிராமங்களில் பயனாளிகளை தேர்வு செய்ய, ஊராட்சி தலைவர், வட்டாரப் பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர், மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, தகுதியானவர்கள் பட்டியலை தேர்வு செய்யும். இப்பட்டியலை அடுத்த மாதம் நடக்க உள்ள, கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மே 1ல் நடக்க வேண்டிய கிராம சபைக் கூட்டம், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நடக்கவில்லை. எனவே, இக்கூட்டம் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.