10 ஆண்டு செல்லும் பாஸ்போர்ட் கார்த்தி சிதம்பரத்துக்கு தர உத்தரவு
10 ஆண்டு செல்லும் பாஸ்போர்ட் கார்த்தி சிதம்பரத்துக்கு தர உத்தரவு
ADDED : மார் 28, 2024 10:37 PM
சென்னை:சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம். இவர் ஆன்லைன் வாயிலாக, 10 ஆண்டுகளுக்கு செல்லும் வகையிலான பாஸ்போர்ட் வழங்கும்படி விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால், மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ''மனுதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, 10 ஆண்டுகளுக்கு செல்லும் வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க முடியாது. ஓராண்டுக்கு மட்டுமே புதுப்பிக்கப்படும்,'' என்றார்.
கார்த்தி சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''பாஸ்போர்ட் சட்ட விதிகள்படி, 10 ஆண்டுகளுக்கு செல்லும் வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பித்து பெற உரிமை உள்ளது.
அரசியல் உள்நோக்கம் காரணமாக, மனுதாரர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு உள்ளன. 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருக்க தகுதியற்றவர் என்பதை நிரூபிக்க, எந்த ஆதாரமும் இல்லை. மத்திய அரசு மறுப்பதற்கும் எந்த காரணமும் இல்லை,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், ''மத்திய அரசு, கார்த்தி சிதம்பரத்துக்கு, 10 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட்டை நீட்டிக்க மறுப்பதற்கான உரிய காரணங்களை தெரிவிக்கவில்லை.
ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்ல நீதிமன்றத்தை நாடிய போது, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை, இதுவரை மனுதாரர் மீறவில்லை. கார்த்தி சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டை, 10 ஆண்டுகளுக்கு புதுப்பித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கொடுக்க வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வெளிநாட்டுக்கு செல்லும் போது வழக்கம் போல உரிய மனுவை தாக்கல் செய்து பெற்றுக் கொள்ளலாம்,'' என, உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

