திடீரென ஏற்படும் உயிரிழப்புகள் அரசுக்கு தெரியப்படுத்த உத்தரவு
திடீரென ஏற்படும் உயிரிழப்புகள் அரசுக்கு தெரியப்படுத்த உத்தரவு
ADDED : ஏப் 10, 2024 03:02 AM
சென்னை: தமிழகத்தில், வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் வெப்ப அலை பாதிப்பு இருக்கும் என்பதால், 'ஹீட் ஸ்ட்ரோக்' என்ற, 'வெப்ப வாதம்' உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, பொதுமக்கள்வெளியே செல்லும் போதும், வீட்டில் இருக்கும் போதும் தேவையான அளவு குடிநீரை பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால், நீர் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
வெயில் கடுமையாக இருப்பதால், சாலையோர வியாபாரிகள், கட்டட தொழிலாளர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், சுரங்க தொழிலாளர்கள், பேருந்து நடத்துனர், ஓட்டுனர்கள் மற்றும் பயணியர் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
மேலும், விவசாயிகள், இணையதள வாயிலாக உணவு மற்றும் வீட்டு தேவை பொருட்கள் வினியோகிப்பவர்கள், காவல் துறையினர், தீயணைப்பு பணியாளர்கள், போக்குவரத்து போலீசாரும், வெயிலால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணியர், முதியோர், இணை நோயாளிகள் ஆகியோரும் மிக கவனமாக இருப்பதுடன், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்லும் நபர்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும். ஓ.ஆர்.எஸ்., என்ற உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு மருந்துகள், உப்பு, சர்க்கரை கரைசல் உள்ளிட்டவற்றை இருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில், திடீரென யாரேனும் உயிரிழந்தால், அதற்கான காரணம் குறித்து ஆராய்வதுடன், அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவசர மருத்துவ உதவிக்கும், ஆலோசனைக்கும், 104 என்ற மருத்துவ சேவை எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

